அன்றாட வாழ்வில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தப் பராமரிப்பாளர்களுக்கு உதவுதல்
தேசியக் குடும்பப் பராமரிப்பாளர்கள் மாதத்தில், பராமரிப்பாளர் செயல்பாட்டு வலையமைப்பு, அல்சைமர் சங்கம், அமெரிக்க நீரிழிவு சங்கம்® உடன் இணைந்து ஐந்து அமெரிக்க நகரங்களில் இலவச ChatGPT செய்முறைப் பயிற்சிகள்.
பராமரிப்புப் பணியில் ஈடுபடுவது என்பது பெரும்பாலும் வேலைக்கும் குடும்ப வாழ்க்கைக்கும் இடையே சமநிலையைப் பேணியபடியே நேர அட்டவணைகளை ஒருங்கிணைப்பது, தகவல்களைக் கண்காணிப்பது, ஆதரவைத் தேடுவது ஆகியவற்றையும் உள்ளடக்கியது. தேசியக் குடும்பப் பராமரிப்பாளர்கள் மாதத்தில், இத்தகைய அன்றாடப் பணிகளில் சிலவற்றை எளிதாக்கும் செயற்கை நுண்ணறிவுத் திறன்களைப் பராமரிப்பாளர்கள் பெற உதவுகிறோம். இதன் மூலம், தாங்கள் பராமரிப்பவர்கள் மீது கவனம் செலுத்த அவர்களுக்கு அதிக நேரம் கிடைக்கும்.
நவம்பர் 10 அன்று, பராமரிப்பாளர் செயல்பாட்டு வலையமைப்பு, அல்சைமர் சங்கம், அமெரிக்க நீரிழிவு சங்கம்® ஆகியவற்றுடன் இணைந்து, பராமரிப்பாளர்கள் மற்றும் சமூகச் சுகாதாரத்திற்கான செயற்கை நுண்ணறிவுத் திறன் பயிலரங்கை OpenAI அகாடமி நடத்துகிறது. இது, பராமரிப்பாளர்கள் ChatGPT‑ஐ நம்பிக்கையுடனும் பாதுகாப்பாகவும் நடைமுறைக்கு ஏற்ற வகையிலும் பயன்படுத்த உதவும் இலவச நேரடிக் கற்றல் நிகழ்வாகும். நாடு தழுவிய இந்த நிகழ்வுகள், அமெரிக்காவின் ஐந்து நகரங்களில் பங்கேற்பாளர்களை ஒன்றிணைக்கும். தனிநபர் மற்றும் குடும்பப் பராமரிப்பாளர்கள், பராமரிப்பாளர் ஆதரவு அமைப்புகள், நாள்பட்ட அல்லது தீவிர உடல்நலப் பாதிப்புகளுடன் வாழ்பவர்கள் இதில் பங்கேற்பார்கள்:
ஓக்லாந்து, கலிஃபோர்னியா
டாம்பா, ஃபுளோரிடா
பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா
அட்லாண்டா, ஜார்ஜியா
டெட்ராய்ட், மிச்சிகன்
அமெரிக்காவில் சுகாதாரம் குறித்து வாரந்தோறும் ChatGPT‑க்கு அனுப்பப்படும் செய்திகளில் 4 கோடிக்கும் அதிகமானவை, வேறொருவரின் சுகாதாரப் பராமரிப்பு குறித்துக் கேட்பதாக OpenAI ஆய்வு ஒன்று மதிப்பிடுகிறது1. தேவையான வளங்களைக் கண்டறிவது, சக பராமரிப்பாளர்களின் ஆதரவைப் பெறுவது, பராமரிப்பாளர்களுக்கு ஆதரவளிப்பது ஆகியவற்றில் ChatGPT எவ்வாறு உதவும் என்பதைப் பங்கேற்பாளர்கள் பயிலரங்குகளில் ஆராய்வார்கள். பின்வருவனவற்றைச் செய்வதும் இதில் அடங்கும்:
பராமரிப்பாளர்களின் நேர அட்டவணைகளையும் சரிபார்ப்புப் பட்டியல்களையும் ஒழுங்குபடுத்துதல்
நம்பகமான கல்வி வளங்களை எளிய மொழியில் புரிந்துகொள்ளக்கூடிய உள்ளடக்கமாக மாற்றுதல்
சமூகத்தில் கிடைக்கும் உதவி வளங்களைக் கண்டறிதல்
ஆதரவுக் குழு விவாதங்களுக்கான வழிகாட்டிகளைத் தயாரித்தல்
தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பது, இந்தக் கருவிகளின் வரம்புகளைப் புரிந்துகொள்வது உள்ளிட்ட, செயற்கை நுண்ணறிவைப் பொறுப்புடன் பயன்படுத்தும் வழிகளையும் பங்கேற்பாளர்கள் கற்றுக்கொள்வார்கள். எப்போது சுகாதார நிபுணர்களை அணுக வேண்டும் என்பதையும், மருத்துவம், சட்டம் அல்லது நிதி சார்ந்த ஆலோசனைகளுக்குப் பதிலாக அல்லாமல் அவற்றுக்குத் துணையாகச் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும் பங்கேற்பாளர்கள் கற்றுக்கொள்வார்கள். பயிலரங்குகள் முழுவதும் OpenAI பயிற்றுநர்களும் வழிகாட்டுநர்களும் செய்முறைப் பயிற்சிக்கு உதவுவார்கள். நிரலாக்க அறிவோ தொழில்நுட்பப் பின்னணியோ தேவையில்லை.
இந்தப் பயிலரங்கு, கற்றலை உள்ளூர் சமூகங்களுக்குக் கொண்டுசெல்கிறது. அங்கு பராமரிப்பாளர்கள் சக பராமரிப்பாளர்களுடன் சேர்ந்து பயிற்சி பெறலாம். இந்தக் கருவிகள் தீர்க்க உதவும் எனத் தாங்கள் எதிர்பார்க்கும் அன்றாடச் சவால்களையும் பகிர்ந்துகொள்ளலாம். தீவிர நோய்களுடன் வாழ்பவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் ஆதரவளிப்பதில் எங்கள் கூட்டாளி அமைப்புகள் ஆழ்ந்த நிபுணத்துவமும் அனுபவமும் கொண்டுள்ளன. அந்த அமைப்புகளின் கண்ணோட்டங்களும் பராமரிப்பாளர்களின் சொந்தக் கண்ணோட்டங்களும், அன்றைய கற்றலை ஒவ்வொரு சமூகத்தின் தேவைகளுக்கும் ஏற்பப் பயன்படுத்த உதவும்.
செயற்கை நுண்ணறிவை அனைவரும் அணுகவும் நடைமுறையில் பயன்படுத்தவும் வழிசெய்யும் OpenAI அகாடமியின் விரிவான பணியின் ஒரு பகுதியாக இந்தச் செயற்கை நுண்ணறிவுத் திறன் பயிலரங்கு அமைகிறது. இலாப நோக்கற்ற அமைப்புகள், சிறு வணிகங்கள், மழலையர் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள், முதியவர்கள் ஆகியோருடன் நாங்கள் முன்பு நடத்திய நிகழ்வுகளின் தொடர்ச்சியாக இது அமைகிறது.
பராமரிப்பாளர் செயல்பாட்டு வலையமைப்பு, அல்சைமர் சங்கம், அமெரிக்க நீரிழிவு சங்கம்® மற்றும் நாடெங்கிலும் எங்களுடன் இணையும் பராமரிப்பாளர்களுக்கும் சமூகச் சுகாதார அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களின் கேள்விகள், யோசனைகள், அனுபவங்கள் ஆகியவை எதிர்காலக் கற்றல் வளங்களை வடிவமைக்க உதவும். பிறருக்கு ஆதரவளிக்கும் அன்றாடப் பணியில் இந்தக் கருவிகள் பயனுள்ளதாக இருப்பதையும் உறுதிசெய்யும்.


